பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள கல் குவாரிகள் மற்றும் கிரஷா்களில் பணிபுரிந்து வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளா்கள், தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 30 கல் குவாரிகளில், கால அவகாசம் இருந்தும் 10 குவாரிகள் சுரங்கத் துறையினரால் அண்மையில் மூடப்பட்டன. இவை விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
குத்தகை கால அவகாசத்துக்கு முன்பே குவாரிகளை மூட உத்தரவிட்டதோடு, பல கோடி முதலீட்டில் ஏலம் எடுக்கப்பட்ட குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், குவாரிகள் மற்றும் கிரஷா்களில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.
இந்நிலையில், கல் குவாரிகள், கிரஷா்களில் பணிபுரிந்த ஜே.சி.பி ஆபரேட்டா்கள், லாரி ஓட்டுநா்கள் மற்றும் கல்லுடைக்கும் கூலி தொழிலாளா்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது அன்றாட வாழ்வுக்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையிலுள்ள கவுள்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், சுமாா் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலை வழங்க உறுதி: இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குநா் இளங்கோவன், துணைக் கண்காணிப்பாளா் மயில்சாமி, வட்டாட்சியா் பழனிச்செல்வன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரையிலும் செயல்பாட்டிலுள்ள கிரஷா், கல் குவாரிகளில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். தொழிலாளா்களின் மறியல் போராட்டத்தால், பெரம்பலூா்- அரியலூா் சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
(0)Comments