சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக். 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற தடையால் காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் கடந்த மே 4ம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த தவெக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முன்னதாக தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக 25 எம்எல்ஏக்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க தவெக பேரம் பேசியதாக அப்போது விமர்சனம் எழுந்தது. அதை தொடர்ந்து சட்டப்பேரவையில் மே 13ம் தேதி நடந்த வாக்கெடுப்பின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்தார். தொடர்ந்து, தவெக அமைச்சரவையில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதனால், தவெக அரசுக்கு வாக்களித்த 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார்கள். அவர்களின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அவர்களை மன்னித்து விட்டதாக சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். அதனால் அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேநேரம், மன்னிப்பு கடிதம் கொடுக்காத அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களின் உறுப்பினர் பதவி ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவையின் கீழ் தளத்தில் சபாநாயகரிடம் கொடுத்தவுடன், மேல் தளத்தில் அமைச்சரை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். இது அப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நான்கு பேரை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்த பிறகு, தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு உள்பட மொத்தமாக தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக காலியாக உள்ள தொகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய சூழல் உள்ளது. ஆனால், தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடைபட்டுள்ளது.
குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தாலும், அதற்கு முன்பாகவே அவர்களது வெற்றிக்கு எதிராக தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள், தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தொடர்ந்தனர்.
எனவே, இந்த 5 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, பாஜ வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ''ஏற்கனவே இந்த தொகுதிகளில் வென்ற வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த தொகுதிகளை முழுமையான காலிப் பணியிடங்களாக கருத முடியாது; நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே அங்கு அவசரமாக இடைத்தேர்தல் நடத்தினால் அது கடுமையான சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்பாக, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த அரசு பணம் செலவிடப்படுவதோடு, ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற அரசியல் சாசன பிரச்னை ஏற்படும் எனக் கூறி, திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க, செப். 8ம் தேதி (இன்று) வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், இந்த தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் சார்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் தான் ராஜினாமா செய்தபோது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என்றும், அதன் பின்னரே வழக்கு தொடரப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொகுதிகள் நீண்ட காலமாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், உடனே இடைத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், தேர்தல் வழக்குகள் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் செப். 9ம் தேதி (நாளை) தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய செப். 16 கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை செப். 17ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற செப். 19ம் தேதி கடைசி நாள். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அக். 9ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த இரண்டு தொகுதிகளில் தாராபுரம் தொகுதியில் திமுக இரண்டாம் இடமும் தவெக மூன்றாம் இடமும் பிடித்தது. அதேபோல், மதுராந்தகத்தில் தவெக இரண்டாம் இடமும் திமுக மூன்றாம் இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் திமுக போட்டியிட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலிலும் இரண்டு தொகுதிகளிலும் மீண்டும் திமுகவே களமிறங்கும். மேலும், தவெக சார்பில் அதிமுகவில் இருந்து விலகிய மரகதம் குமரவேல், பி.சத்தியபாமா ஆகியோரே மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
புதுச்சேரி, மேற்கு வங்கம் அசாமில் இடைத்தேர்தல்
தமிழ்நாடு உட்பட மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜினகர் தொகுதிகளிலும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும், அசாமில் நாகான் மக்களவை தொகுதிக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி பவானிபூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்ததோடு நந்திகிராம் தொகுதியிலும் வெற்றி பெற்றார். இதன்பின், நந்திகிராம் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் வென்று தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார்.
2 தொகுதி ஓட்டு விவரம்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் டி.இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தவெக வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். நோட்டோவுக்கு 1,058 வாக்குள் பதிவாகி இருந்தன. அதேபோல், மதுராந்தகத்தில் அதிமுகவின் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் 62,090 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். திமுக வேட்பாளர் எஸ்.அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். நாம் தமிழர் வேட்பாளர் ஜனகிராமன் 4,950 வாக்குகள் பெற்றார்.
(0)Comments