புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
விலைவாசி உயர்வின் ஹைவோல்டேஜ் ஷாக், இப்போது பண்டிகை கால மகிழ்ச்சியின் மீதும் பெரும் சுமையை ஏற்றுகிறது. வெறும் 3 வாரங்களில் வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை இருமடங்காகியுள்ளது. சர்க்கரை விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
தீபாவளிக்கு முன்பாகவே பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை மற்றும் வால்நட் ஆகியவற்றின் விலைகளும் கூட உயர்ந்துவிட்டன. பால் மற்றும் சர்க்கரையின் விலை உயர்வதால், இனிப்பு வகைகளின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நெய் மற்றும் மசாலாப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், சமையலறைச் செலவு அதிகரித்துள்ளது. பண்டிகைகளைக் கொண்டாடுவது செலவு மிகுந்ததாக மாறியுள்ளது. குடும்ப பட்ஜெட் நெருக்கடியில் உள்ளது.
மக்களின் பைகளை காலி செய்யும் இந்த விலைவாசி உயர்வு எனும் ஷாக் மோடி அரசுக்கு தெரியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் தாக்கத்தை புள்ளிவிவர வித்தைகள் மூலம் மறைப்பதில் மோடி அரசு மும்முரமாக உள்ளது. மோடி அவர்களே, புள்ளிவிவர வித்தைகளால் விலைவாசி உயர்வின் தாக்கத்தை மறைக்க முடியாது. மக்கள் அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
(0)Comments