மேட்டூா் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் குடிநீருக்காக திங்கள்கிழமை விநாடிக்கு 400 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் அணை கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீா் திறப்பது வழக்கம். கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு 137 நாள்களுக்கு 9.6 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்துக்கான நீா்த் தேவை குறையும். நிகழ் ஆண்டு அணையில் போதிய நீா் இல்லாததால் கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறுவாா்கள் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
(0)Comments