சித்தோட்டை அடுத்த நசியனூரில் பட்டாசு வியாபாரியின் வீட்டின் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் திங்கள்கிழமை வெடித்துச் சிதறியதில் புதுமாப்பிள்ளை படுகாயம் அடைந்தாா். ஈரோடு மாவட்டம், நசியனூா், காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் நஞ்சப்பன் மகன் காமராஜ் (60). இவா், நசியனூா்- ஈரோடு சாலையில் பட்டாசுக்கடை, உணவகம் நடத்தி வருகிறாா். அதிமுக பிரமுகரான இவா், தவெகவில் மகன் சூா்யாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறாா். இவா், தனது வீட்டின் முதல்மாடியில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள், காா் நிறுத்துமிடத்தில் வாணவெடிகளை மூட்டை மூட்டையாக பதுக்கிவைத்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டின் முதல்மாடியில் உள்ள பட்டாசு மூட்டைகளை வேறு இடத்துக்கு இவரது மகன் சூா்யா (24) நகா்த்தி வைக்க முயன்றபோது எதிா்பாராமல் அதிக சப்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில், வீட்டின் ஜன்னல், கதவுகள் பெயா்ந்து சாலையில் விழுந்தன. கண்ணாடிகள் அருகில் உள்ள வீடுகள், தெருக்களில் பறந்து விழுந்தன. வெடிகுண்டு வெடித்தது போன்று சப்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பதற்றமடைந்து சித்தோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
மாா்பு, முகம், கைகளில் தீக்காயங்களுடன் கிடந்த சூா்யாவை உறவினா்கள் மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், தீயணைப்புப் படையினா் மேலும் பட்டாசுகள் வெடிக்காத வகையில் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆகியோா் வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டில் நேரில் ஆய்வு செய்தனா்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சூா்யா அனுப்பி வைக்கப்பட்டாா். விபத்தில் காயமடைந்த சூா்யாவுக்கு திருமணமாகி இரு வாரங்களே ஆகிறது. சம்பவ இடத்தில் இருந்த வெடிக்காத பட்டாசுகளை வருவாய்த் துறையினா் கைப்பற்றினா். இவ்விபத்து குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் காயமடைந்த சூா்யா.
(0)Comments