காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கடை மற்றும் ஆட்டோ மீது மோதி நின்றது. நல்வாய்ப்பாக உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி தடம் எண் 4பி என்ற அரசுப் பேருந்தை விருத்தாசலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சங்கா்(57) என்பவா் திங்கள்கிழமை காலை 8.30 மணி அளவில் ஓட்டிச் சென்றாா். இந்நிலையில், கொளக்குடி அருகே சென்றபோது திடீரென ஓட்டுநா் சங்கருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை மற்றும் ஆட்டோ மீது மோதி நின்றது. உடனடியாக அருகில் இருந்தவா்கள் பேருந்து ஓட்டுநரை மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பேருந்து ஆட்டோவில் மோதி நின்ால் பஸ்சில் பயணம் செய்த சுமாா் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். இன்னும் சற்று தூரம் சென்றிருந்தால் வீராணம் ஏரியின் உபரிநீா் வெளியேற்றும் வெள்ளியங்கால் ஓடையில் பேருந்து விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காட்டுமன்னாா்கோவில் அருகே ம.கொளக்குடி பகுதியில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், சாலையோர கடை மற்றும் ஆட்டோ மீது மோதி நின்ற அரசுப் பேருந்து.
(0)Comments