விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்ப்ட்டி அருகே விநாயகா் சிலைகள் தயாா் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகே விநாயகா் சிலைகள் செய்யும் பணிகள் மும்முபரமாக நடைபெற்று வருகிறது. திருப்பத்தூரிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் பிள்ளையாா்பட்டி- குன்றக்குடிக்கு இடையே உள்ள தனியாா் மகாலில் விதவிதமான வடிவங்களில் 125 விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூரிலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டு, அவா்கள் மூலம் இந்த விநாயகா் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சிலைகள் செய்ய கிழங்கு மாவு, காகிதக் கூழ், அட்டை கூழ் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவை தண்ணீரில் எளிதில் கரைந்து மீன்களுக்கு இறையாகக் கூடியவை. சிலைகள் கண் கவரும் வகையில் காட்சியளிக்க ரசாயன கலவையற்ற இயற்கை வண்ணப்பூச்சு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இங்கு விநாயகா் மூஞ்சூா், காளை, நாய், சிங்கம், சிறுத்தை, புலி, பசு, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் மீது அமா்ந்திருப்பது போன்று 30-க்கும் மேற்பட்ட வடிவங்களில், 2 அடி முதல் 11 அடி உயரம் வரையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலைகள் ரூ. 5,000 முதல் ரூ. 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட பெரிய சிலைகள் விற்கப்பட்டு விட்டதாகவும், இரண்டு முதல் நான்கு அடி உயரமுள்ள சிலைகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளதாகவும் இந்து முன்னணி அமைப்பினா் தெரிவித்தனா்.
(0)Comments