சென்னை: 'இயற்கை மதுபானமான கள் இறக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். கள் இறக்க, விற்க உரிமம் தந்து, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம்' என்று ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19, 20-ம் தேதிகளில் சட்டவிரோதமாக, மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 161 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது சம்பவத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ப.கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் விசாரணை நடத்தி, தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
> மெத்தனாலுடன் தண்ணீர் போன்ற வேறு சில திரவங்கள் கலந்த கலவையை கொண்ட கள்ளச்சாராயத்தை அருந்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துரை, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் தரப்பிலும் கடுமையான அலட்சியமும், கடமை தவறிய போக்கும் இருந்துள்ளது.
> கள்ளச்சாராய விற்பனை அதிகமாக நடைபெறும் பகுதிகள் என தெரிந்திருந்தும், ஆரம்பத்திலேயே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராயப்பாளையம் வட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் இப்பேரழிவுக்கு பொறுப்பானவர்கள்.
> சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அபாயகரமான மெத்தனால் வேதிப்பொருள் கடத்தி வரப்பட்டதை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
> மெத்தனால் பயன்பாடு, சேமிப்பு மற்றும் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் கடுமையான விதிகள், தண்டனைகளை கொண்டு வர வேண்டும். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட சார்பற்ற மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுவை அமைத்து, மாதந்தோறும் தவறிழைக்கும் அதிகாரிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் சொத்துகள் மற்றும் வசூலிக்கப்படும் அபராத தொகையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு நிதியை உருவாக்க வேண்டும்.
> கள்ளச்சாராயத்தால் பகுதியளவு ஊனமுற்றவர்களுக்கு ரூ.2 லட்சம், முழுமையாக ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 லட்சம் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். கணவரை இழந்த பெண்களுக்கு உடனே விதவை ஓய்வூதியம் வழங்குவதுடன், சுயதொழில் தொடங்க நீண்டகால அடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
> பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த தகுதியான குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில் தலா 5 படுக்கைகள் கொண்ட போதை மறுவாழ்வு பிரிவுகளை அமைத்து, மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மூலம் வாரந்தோறும் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும்.
> கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
> அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருதி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம் அல்லது படிப்படியாக அமல்படுத்த பரிசீலிக்கலாம். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றலாம்.
டாஸ்மாக்கில் இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை 50 சதவீதம் குறைக்கலாம்.
> இயற்கை மதுபானமான கள் இறக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். கள் இறக்க, விற்க உரிமம் தந்து, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம்.
(0)Comments