ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்; முதல்வர் விஜய்யின் நண்பர்கள் கட்டுப்பாட்டில் கனிமவளத்துறை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்; முதல்வர் விஜய்யின் நண்பர்கள் கட்டுப்பாட்டில் கனிமவளத்துறை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
View on original source
Category: Politics
Share
Archive
Like
சென்னை: முதல்வரின் நண்பர் விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டியின் கட்டுப்பாட்டில் கனிமவளத்துறை உள்ளது. இது குறித்து ஒவ்வொரு ஆதாரங்களையும் நான் ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். தமிழக சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டி தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். திமுகவினருடன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் ெவளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: கடந்த வியாழன் அன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீர் கெட்டு போயுள்ளது என்பதை ஆதாரத்தோடு பேசி இருந்தேன். 15 கேள்விகளை முதல்வர் முன் வைத்திருந்தேன். முதல்வர் அந்த கேள்விகளுக்கு டைவர்ஷன் டாக்டிக்ஸ் எதுவும் செய்யாமல் நேரடியாய் பதில் சொல்ல வேண்டும் என கேட்டிருந்தேன். ஆனால் முதல்வர் பதிலுரையில் எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்க மேல வைக்க ஆரம்பிச்சாரு. நான் வியாழக்கிழமை பேசும்போது, நீங்க ஆட்சிக்கு வந்துட்டீங்கங்கறத நம்புங்க. இப்ப திமுக ஆட்சியில் இல்லைங்கறத நீங்க நம்பணும். உங்களுடைய ஆட்சி அமைஞ்சிருச்சுங்கிறத தயவு செய்து நம்புங்க. மீண்டும் எங்க மேல பழிய போடாம இந்த மூன்று மாதங்களில் என்னென்ன பண்ணி இருக்கீங்க. அடுத்து என்ன பண்ண போறீங்க அப்படிங்கற பதில் சொல்லுங்க என சொல்லிருக்கேன். ஆனால் தற்போது திமுக ஆட்சி நடக்குதுங்கிற அதே நினைப்புல முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை சில கட்சி கூட்டங்களில் எங்களுடைய உறுப்பினர்கள் வெளில பேசுனது இந்த அரசின் மீது வச்ச விமர்சனத்தை எல்லாம் உள்ள கொண்டு வந்து பேசி அதை எல்லாம் வந்து அவை குறிப்புல பதிவேற்ற செய்ய ஆரம்பிச்சார். நானும் என்னுடைய சட்டமன்ற உறுப்பினரும் எழுந்து சபாநாயகர் கிட்ட முதல்வர் வெளியில் பேசுறத பத்தி இங்க பேசுறாரு நீங்க வாய்ப்பு கொடுங்க அதுக்கு பதில் சொல்லணும் அப்படின்னு கேட்டோம். ஆனா வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் பல தவறான குற்றச்சாட்டுகளை பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்கா வச்சுக்கிட்டே இருந்தாரு. எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் எங்களுக்கு பதில் சொல்வதுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுச்சு. முதல்வர் பேசி முடிச்ச உடனே நாங்க அனைவரும் மீண்டும் எந்திரிச்சு கேட்டோம். ஆனா அதற்கும் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே வெளிநடப்பு செய்தோம். இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து சட்டம்-ஒழுங்கு எந்த நிலைமையில் இருக்கிறது என்று பத்திரிகை நண்பர்களாகிய உங்களுக்கு தெரியும். மக்களும் தினமும் தொலைக்காட்சிகளில் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், வெறும் பஞ்ச் டயலாக்குகள், வெறும் டைவர்ஷன் டாக்டிக்ஸ் தான். உதாரணத்திற்கு, அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், உறுப்பினர்கள் மீது எல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால், அதற்கு மாறாக, திமுக ஆட்சியில் இவர்கள் மீது இவ்வளவு வழக்குகள் இருக்கின்றன என்று எங்கள் மீது திருப்புகிறார். வழக்கு இருந்தால் நீங்கள் நடத்துங்கள், ஆக்சன் எடுங்கள் என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம். இன்னும் சொல்லப்போனால், ஒரு அமைச்சர் ஐபிஎல் போட்டியிலேயே உட்கார்ந்து பொடி போட்டதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கிரெடிட் கார்டில், போனில் வைத்து பொடி போட்டதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் வியாழக்கிழமை பேசிய உடனே, கடந்த மூன்று நாட்களாக அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் போய், போய் அவசர அவசரமாக என்னென்ன செய்து கொண்டிருந்தார்கள், எந்தெந்த பிரச்னைகளை எல்லாம் தீர்க்கப் பார்த்தார்கள் என்பதைப் பத்திரிகை நண்பர்களாகிய நீங்களும் பார்த்திருப்பீர்கள். அவர்களுடைய கட்சிக்காரர்களே இன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேற்று சென்னையில் பட்டப்பகலில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன. அதைப் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டேன். அதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.எங்கள் மீதான பொய் வழக்குகளை சட்டப்படி சந்திப்பதற்கு நாங்கள் அத்தனை பேரும் தயார். நேற்று முன்தினம் எங்களை மிரட்டுவதற்காக, நாங்கள் எல்லாம் பயந்து விடுவோம் என்று நினைத்து, டிவிஏசியை வைத்து முன்னாள் அமைச்சர், முதன்மைச் செயலாளர் நேருவின் வீட்டிற்கு ரெய்டு போனார்கள். ரெய்டு போனவர்கள் ஒரு ஐந்து, ஆறு மணி நேரத்தில் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தார்கள். வெளியே வந்து அண்ணன் நேருவே தெளிவாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். எனவே, இதையெல்லாம் சட்டப்படி சந்திப்பதற்கு நாங்கள் தயார். நான் இந்த அரசு மீது இப்போது ஓப்பனாக ஒரு குற்றச்சாட்டு வைக்கிறேன். முதல்வருடைய நண்பர்கள், அவருடைய ஆபீஸில் இருக்கக்கூடிய அட்வைசர்ஸ் பேர் விஷ்ணு ரெட்டி. சமீபத்தில் ஒரு அமைச்சர் பேசும்போது அவருக்கு நன்றி சொன்னார். விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, அவருடைய பிசினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி-இவர்கள் எல்லாம் சேர்ந்து இப்போது மைனிங்ஸ், அரசு நடத்தக்கூடிய மைனிங்ஸ் எல்லாம் இவர்கள் தான் இப்போது புல் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்கள். இதற்கான ஒவ்வொரு ஆதாரங்களையும் நான் ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன். இப்படி நாங்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்வதற்கு வக்கற்ற ஒரு அரசு இன்று அமைந்திருக்கிறது. முதல்வருடைய பதில் முழுக்க முழுக்க ஒரு சினிமா ஷூட்டிங்குக்கு என்னென்ன தேவையோ, அதை மூன்று நாளாக உட்கார்ந்து மனப்பாடம் பண்ணி, பிரிப்பேர் பண்ணிக்கொண்டு வந்து இங்கு பேசியிருக்கிறார். இதையெல்லாம் கண்டித்து, நாங்கள் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்கிறோம். அதே மாதிரி, பாரபட்சமாக, ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டிருக்கக்கூடிய சட்டப்பேரவைத் தலைவருக்கும் எங்களுடைய கண்டனத்தை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். ஒப்புவித்தல் போட்டி மாதிரி ஒப்புவிச்சிருக்காரு ''நாங்க வச்ச ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லல. கடந்த வியாழக்கிழமை அன்று திங்கள்கிழமை பதில் சொல்றேன்னு சொல்லிட்டு வேகமா ஓடி போயிட்டாரு. சரி நான் கூட ஏதாவது பிரிப்பேர் பண்ணிட்டு வருவாரு. மூணு நாள் டைம் இருக்கு நல்லா மனப்பாடம் பண்ணிட்டு வருவாரு அப்படின்னு நாங்க நினைச்சோம். வியாழக்கிழமை அன்னைக்கு ஓட்ட பந்தயத்தில ஓடுன மாதிரி ஓடினாரோ. அதே மாதிரி இன்னைக்கு மனப்பாடம் பண்ணிட்டு ஒப்புவித்தல் போட்டி மாதிரி சட்டசபையில தவறான கருத்துகளை பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்புவிச்சிருக்காரு. நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக் அதே சினிமா வசனங்கள் அதே ஆக்டிங் ரீல்ஸ்காக மட்டுமே இந்த முதல்வர் இந்த பதிவு உரையை சொல்லி இருக்கிறார்'' என்று உதயநிதி தெரிவித்தார். பாஜவில் 'பா' கூட வாயில் வராத டம்மி முதல்வர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு: கே: பா.ஜ. பற்றி நீங்கள் கடந்த வியாழக்கிழமை பேசியிருந்தீர்கள். பா.ஜ. பற்றி முதல்வர் எதுவுமே பேசவில்லையே ஏன்? ப: அவர்கள் பாஜ இல்லை. அமித் ஷா கூடத் தேவையில்லை, 'பா' கூட வராது. இன்னும் சொல்லப்போனால், ஒரு அமைச்சர் பாஜவைக் கண்டித்து, பா.ஜ தலைவர்களைக் கண்டித்து, அவையில் பேசுகிறார். அதை இன்னொரு அமைச்சர் எழுந்து, ``அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குங்கள்'' என்கிறார். அந்த அளவுக்குத்தான் இந்த அரசு இருக்கிறது. தைரியமற்ற, வக்கற்ற அரசு. ஒரு `டம்மி முதல்வர்'தான் இப்போது உட்கார்ந்திருக்கிறார். யார் யார் வசனம் எழுதுபவர்கள் எழுதி தருகிறார்களோ, அதை நன்றாகப் படித்துவிட்டு, மூன்று நாளில் நன்றாக ஆயத்தமாகி வந்திருக்கிறார். அதை இன்றைக்கு நேரம் கிடைத்த உடனே பேசிவிட்டார். எங்களோடு சேர்ந்து எங்களுடைய கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், மனிதநேய மக்கள் கட்சியினரும், மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகிய இருவருமே சேர்ந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். கே: முதல்வர் பேசுவது மக்களுக்குச் சென்றடையக்கூடாது என்பதற்காகத்தான் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்று சபாநாயகர் குற்றச்சாட்டு வைக்கிறாரே? ப: நாங்கள் பதிலுரை முடிந்து தான் கேட்டோம். முதலில் சபாநாயகர் அனுமதிப்பதாகக் கூறினார். அதன் பிறகு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை, `அனுமதிக்க முடியாது' என்றார். அதனால்தான் பத்திரிகையாளர்களாகிய உங்களை சந்திக்க வந்துள்ளோம். கே: முதல்வர் ரத்தீஷ் யார் என்று கேட்கிறாரே? ப: ஆதாரம் இருக்கிறதா? கே: நூலகத்தில் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். ப: வாருங்கள், இரண்டு பேரும் நூலகத்திற்குப் போவோம். நூலகத்தைப் பற்றியெல்லாம், இப்போது இருக்கக்கூடிய முதல்வர் பேசலாமா? பிறகு பெண்களை தவறாகப் பேசினோம் என்கிறார். இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடாது, மூன்று அர்த்தத்தில் பேசக்கூடாது என்கிறார். இவற்றையெல்லாம் இந்த முதல்வருக்கு சொல்வதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. இவர் நடித்த படங்கள் என்ன? நடித்த காட்சிகள் என்ன? பாடிய பாடல்கள் என்ன? இதையெல்லாம் இப்போது பேசினால் அவரால் தாங்க முடியாது. உங்களுடைய நண்பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? சுஜய் ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? அனில் ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? ஏன் இப்போது வரக்கூடிய எல்லா சுரங்கங்கள், எல்லா பொறுப்புகளையும் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள்? அதற்கான ஆதாரத்தை நாங்கள் வெளியிடுவோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். ஆதாரம் கேட்டால் குற்றச்சாட்டை சொல்கிறார் முதல்வரிடம் நீங்கள் ஆதாரம் எடுத்துக்காட்டுங்கள் என்று கேட்டதற்கு, முதல்வர் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று ஆதாரங்களை கையில் வைத்திருந்தாரே அதைபற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் என்ற கேள்விக்கு, ''அதெல்லாம் ஆதாரம் கிடையாது. அவை வெறும் குற்றச்சாட்டுகள்தான். இந்த மாதிரி எல்லா ஆதாரமும் எங்களிடம் இருக்கின்றன. இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அமலாக்கத்துறை வழக்கின் குற்றச்சாட்டை கூறுகிறாரே, இதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. முதல்வர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. சிபிஐ குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆதாரம் கிடையாது, அதை நிரூபிக்க வேண்டும்'' என்று உதயநிதி பதில் அளித்தார். பேச விடக்கூடாதுன்னு பிரஷர் ''முதல்ல எதிர்க்கட்சி தலைவருக்கு நான் வாய்ப்பு கொடுக்கிறேன் அப்படின்னு சொன்னாரு. என்ன பிரஷர் வந்துச்சு என்னன்னு தெரியல. அது முதல்வருடைய அறிவிப்பா, அவர் சொன்னதுனாலயா இல்ல வேறு யாராவது சொன்னார்களா தெரியல திடீர்னு மாத்தி இல்ல இல்ல அனுமதிக்க முடியாது என கூறி விட்டார். நாங்களும் அமைதியா இருந்தோம் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரு அப்படின்னு காத்துக்கிட்டு இருந்தோம். ஆனா மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை'' என்று உதயநிதி தெரிவித்தார்.

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.