பெங்களூரு: இஸ்ரோ தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்றும் அதன் முக்கியத்துவம் ஒருபோதும் குறையாது என்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மையத்தின் தலைவர் பவன் கோயங்கா அண்மையில் அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் இஸ்ரோ எந்தவொரு ராககெட்டையும் தயாரிக்காது என்றும், முழுக்க முழுக்கத் தனியார் நிறுவனங்களே ராக்கெட் தயாரிப்பில் ஈடுபடும் என்றும் தெரிவித்திருந்தார். இஸ்ரோ தனியார்மயமாக்கப்படும் என்ற இந்த செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தங்கள் கவலையை வெளிப்படுத்தி இஸ்ரோ ஊழியர்கள் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இது தொடர்பாக இஸ்ரோ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ''இஸ்ரோ ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது; அதன் முக்கியத்துவம் எந்த காலத்திலும் குறைக்கப்படாது. ஊடகங்களில் வெளியாகும் யூகங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2023ம் ஆண்டு கொள்கையாக வகுக்கப்பட்ட விண்வெளி சீர்திருத்தங்கள் மூலம், நாட்டின் விண்வெளி பொருளாதாரத்தை தற்போதைய 8.4 பில்லியன் டாலரில் இருந்து 2033ம் ஆண்டுக்குள் 44 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காகவே 450க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.
விண்வெளி தொலைநோக்கு 2047ம் திட்டத்தின்படி, வரும் 2035ம் ஆண்டுக்குள் பாரதிய விண்வெளி நிலையத்தை அமைப்பது, 2040ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்புவது போன்ற அதிநவீன ஆய்வுகளில் இஸ்ரோ முழுக் கவனம் செலுத்தும் என்றும் வழக்கமான தயாரிப்புகள் மட்டுமே பிற துறைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட இ.ஓ.எஸ்-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணியில் அதன் லாம் இன்ஜின் 338.9 வினாடிகள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு செயற்கைக்கோள் 35786 கி.மீ. உயரத்தில் சீராக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
(0)Comments